சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.37 கோடியைக் கடந்துள்ளது.அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.72 கோடியைத் தாண்டியுள்ளது.
எனவே அங்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து முழுவீச்சில் போட்டு வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது.
சி.டி.சி.யின் இந்தப் பரிந்துரையை அரசும் செயல்படுத்தி உள்ளது. அதன்படி அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சமீபத்தில் மாஸ்க் இல்லாமலேயே செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதனால் அமெரிக்காவில் விரைவில் இயல்பு நிலை திரும்ப உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று அடுத்த 6 வாரங்களில் உலக நாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்க உள்ளோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.