6 சிக்ஸர்கள் அடிப்பதற்கு முன்பு நடைபெற்ற மோதல் – பழைய நினைவுகளை பகிர்ந்த யுவராஜ் சிங்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. இந்த நேரத்தில் போட்டியின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை முன்னாள் வீரர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
கிரிக்கெட்டின் சாதனைப் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் இந்திய அணியின் யுவராஜ் சிங்கிற்கு முக்கிய இடம் உண்டு. 2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தார்.
அந்த ஓவருக்கு முந்தைய ஓவரை பிளின்டாப் வீசினார். அப்போது எனக்கும் அவருக்கும் இடயில் காரசாரமான விவாதம் நடைபெற்றது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘ஆறு பந்தில் ஆறு சிக்சர்கள் அடிப்பதற்கு முந்தைய ஓவரை பிளின்டாஃப் வீசினார். முதல் இரண்டு பந்துகளை மிகவும் சிறப்பாக வீசினார் என்று நினக்கிறேன். அதற்கு அடுத்த பந்தை யார்க்கராக வீசினார். நான் அதை பவுண்டரிக்கு விரட்டினேன். அப்புறம் என்னிடம், டேஷ் ஷாட் (Dash Shot) என்று கூறிய பிளின்டாப், தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
அப்போது அவர் என்னிடம் உன்னுடய கழுத்தை அறுக்கப் போகிறேன் என்றார். அப்போது என்னுடைய கையில் இருக்கும் பேட்டை பாருங்கள்?. உங்களுடைய பந்தை இந்த பேட்டால் எந்தப்பக்கம் அடிக்கப்போகிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? என்றேன்.
ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 6 சிக்சர்கள் அடிக்கும்போது மிகவும் கோபமாக இருந்தேன். பந்துகளை விளாசிய பின்னர் டிமிட்ரி மாஸ்கரேனஸ், பிளின்டாஃப் ஆகியோரை பார்த்தேன். மாஸ்கரேனஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் என்னுடைய பந்தில் ஐந்து சிக்ஸ் அடித்தார். இதனால் அவரை முதலில் பார்த்தேன். இந்த போட்டி எங்கள் எல்லோருக்கும் எப்போதும் நினைவில் இருக்கக் கூடியது’’ என்றார்.