கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் கூட இல்லை. இந்த தேர்தலுக்கான கால அட்டவணை ஓரிரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
இதையொட்டி பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகம் வந்து திட்ட பணிகளை தொடங்கி வைப்பதும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும் என்று பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 முறை கர்நாடகத்திற்கு வந்து திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். பெலகாவி, தார்வாரில் அவர் ஊர்வலமும் நடத்தினார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி 6-வது முறையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகம் வருகிறார். மண்டியா, தார்வாரில் நடைபெறும் விழாவில் அவர் கலந்து கொண்டு ரூ.16 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.8 ஆயிரத்து 480 கோடியில் தேசிய நெடுஞ்சாலை எண்.275-ல் பெங்களூரு-மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை திறந்து வைக்கிறார். இந்த விரைவுச்சாலையால் பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு 75 நிமிடங்களில் சென்றடைய முடியும். இதுவரை அந்த இரு நகரங்களுக்கும் இடையே பயண நேரம் 3 மணி நேரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து மைசூரு-குசால்நகர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 92 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அந்த சாலை ரூ.4,130 கோடியில் அமைக்கப்படுகிறது. இந்த சாலையால் பெங்களூரு-குசால்நகர் இடையே தற்போது உள்ள பயண நேரம் 5 மணி நேரத்தில் இருந்து 2½ மணி நேரமாக குறையும்.
இந்த விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் தார்வாருக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் தார்வார் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான அடிக்கல்லை மோடி கடந்த 2019-ம் ஆண்டு நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்டிடம் ரூ.850 கோடியில் நிறுவப்பட்டுள்ளது. அந்த கல்லூரியில் பி.டெக், பி.எஸ்., எம்.எஸ்., எம்.டெக், பி.எச்.டி. போன்ற படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
சித்தரோட சுவாமி உப்பள்ளி ரெயில் நிலையத்தில் 1,507 மீட்டர் தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த நடைமேடை ரூ.20 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ஒசப்பேட்டை-உப்பள்ளி-டினைகாட் இடையேயான பாதை மின்மயம் ஆக்கப்பட்டுள்ளது. இது ரூ.530 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் நல்ல தொடர்பு வசதி ஏற்படும்.
ஒசப்பேட்டே ரெயில் நிலையம் ஹம்பி பாரம்பரிய சின்னத்தை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து உப்பள்ளி சீர்மிகு நகர திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்ட பணிகளின் மதிப்பு ரூ.520 கோடி ஆகும்.
மேலும் பிரதமர், ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி, ஆராய்ச்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இது ரூ.250 கோடியில் நிறுவப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மண்டியா மற்றும் உப்பள்ளி-தார்வாரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு அதிகளவில் திட்டங்களை வழங்கியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை, ரெயில்வே திட்டங்கள், துறைமுகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளார்.
இதுவரை பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். தார்வார் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்திற்கு படிப்படியாக நிதி ஒதுக்கப்பட்டது. இது பெருமைமிகு நிறுவனம். இதை நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.