X

500 மின்சார பேருந்துகளுக்காக ஜெர்மன் வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையிலும், காற்று மாசுப்படுவதை குறைக்கின்ற வகையிலும், மின்சாரத்தில் இயங்கிடும் பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கிட வேண்டும் என்கிற உயரிய நோக்கில், லண்டன் மாநகரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சி-40 என்கிற பன்னாட்டு முகமைக்கும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும் கடந்த 28.3.2018 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களை கொண்டுள்ள இந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன் முன்னோட்டமாக, கடந்த 26.8.2019 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரலாற்றில் முதல் முறையாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கான முதல் புதிய மின்சார பேருந்தினை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

2019-20-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன், ரூ.5 ஆயிரத்து 890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகளையும், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை செயல்படுத்திடும் நோக்கில், முதற்கட்டமாக ரூ.1,580 கோடி (203 மில்லியன் யூரோ) மதிப்பீட்டிலான பிஎஸ்-6 தரத்திலான 2 ஆயிரத்து 213 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கான திட்ட ஒப்பந்தம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும், ஜெர்மன் வளர்ச்சி வங்கிக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த திட்ட ஒப்பந்தத்தின் மூலம், மின்சார வாகனங்களுக்கான மின் ஏற்று கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், போக்குவரத்து துறையின் செயல்பாட்டினை மேம்படுத்திட மென்பொருள் மற்றும் வன்பொருள் கொள்முதல் செய்தல், பயணிகள் தகவல் அமைப்பை நிறுவுதல், உலகத்தரத்திலான ஆலோசகர்களின் உதவிகளை பெறுதல், பணமில்லா பயணசீட்டு முறை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இந்த நிகழ்வின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் கடந்த 6-ந்தேதி அன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பிறப்பு பாலின விகிதம் அதிகரிக்கும் வகையில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட சிறந்த மாவட்டத்திற்கான விருதினை நாமக்கல் கலெக்டர் எம்.ஆசியா மரியம், இத்திட்டம் குறித்து மக்களிடையே சிறப்பான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட சிறந்த மாவட்டத்திற் கான விருதினை திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாரும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.