X

5 வது முறையாக இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார் சீனு ராமசாமி. சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகவில்லை.

இதையடுத்து விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பின்னர் விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர்கள் இருவரும் 5-வது முறையாக இணையும் படத்தை, அசுரன், கர்ணன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தான் தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.