X

5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை

அ.தி.மு.க. ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டால் மட்டுமே கடைமடைப் பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கும், குடிதண்ணீர் தேவைகளுக்கும் தண்ணீர் உறுதி செய்யப்படும் என்பதை, யதார்த்த நிலை தெளிவுபடுத்துகிறது.

கேரள அரசு மீண்டும், மீண்டும் முல்லைப் பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பாகவும், தவறான தகவல்களின் அடிப்படையிலும் எழுப்பி வரும் பிரச்சனைகளுக்குப் பணிந்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அணையில் நீர் 138 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரள அமைச்சர்கள், அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நீரை திறக்க மதகுகளை உயர்த்தி இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்கம். அந்த அணையில் நீர் இருப்பை கண்காணிப்பது போல, கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் மதகுகளைத் திறந்தது, முல்லைப் பெரியாறு அணையின் மீது தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல் என்பதை நீண்ட அரசியல் அனுபவமுடைய அமைச்சர் துரைமுருகனுக்கு நினைவூட்டுகிறோம்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு, அதன்மூலம் தென் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில், குறிப்பாக கடைமடைப் பகுதியான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்வதற்கு ஜெயலலிதா முன்னெடுத்த சட்ட ரீதியிலான போராட்டங்களை நினைவில் கொண்டு, அப்போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டும் வகையில், தற்போதைய தமிழ்நாடு அரசு உறுதித் தன்மையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

காவேரி நீர்ப்பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகளையும், பாலாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரங்களிலும், எந்தச் சூழ்நிலையிலும் உறுதி குலைந்து விடாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படுவது மிகவும் இன்றியமையாத கடமை என்பதை தி.மு.க. அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத் தேவையையும், குடிதண்ணீர் தேவைகளையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வரும் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையும், மாநில மக்களின் உரிமைக்காகப் போராடுவதில் தி.மு.க. அரசு காட்டும் ஏனோதானோ மனநிலையையும் கண்டித்து, அ.தி.மு.க.வின் சார்பில் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத் தலைநகரங்களில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

எனவே 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் காக்க, அ.தி.மு.க.வின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களில், விவசாயப் பெருங்குடி மக்களும், கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.