5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஆளும் திமுக கட்சிக்கு எதிராகவும், தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் அதிமுக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார். அதன்படி தமிழகத்தின் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், மயிலாதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிமுக சார்பில் அக்டோபர் 6 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமல், குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காததற்கு திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட இருக்கிறது.
மேலும் குறுவை சாகுபடிக்கு மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட இருக்கிறது. இதோடு உச்ச நீதிமன்ற ஆணைபடி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட இருக்கிறது.
இந்த ஆர்பாட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகள், கட்சி தொடர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் ஆர்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.