X

5 மாநில தேர்தல் முடிவுகள்! – ஜனாதிபதி பதவியில் வரப்போகும் மாற்றம்?

 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை மாதம் 24-ந் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. அதற்கு முன்பு ஜூலை மாத தொடக்கத்தில் புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான நடை முறைகள் ஆரம்பித்துவிடும்.

இந்திய ஜனாதிபதி மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவது இல்லை. அதற்கு பதில் மக்களின் பிரதிநிதிகளால் மறைமுக தேர்தல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

அதாவது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வாக்களித்து ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் எம்.பி.க்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்குகளின் மதிப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் வாக்கு 708 ஆகும். பாராளுமன்ற மக்களவையில் 543 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அதுபோல பாராளுமன்ற மாநிலங்களவையில் 233 எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்கின் மதிப்பு தலா 208 ஆகும். இதை கணக்கிட்டால் பாராளுமன்ற எம்.பி.க்களின் மொத்த வாக்குகளின் மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 வருகிறது.

மாநிலங்களவையில் மொத்தம் 4,120 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். இவர்களுக்கு அவர்களது மாநில மக்கள் தொகையை பொறுத்து வாக்கின் மதிப்பு மாறுபடும். 1971-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கு மதிப்பின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்தியா முழுவதும் உள்ள 4,120 எம்.எல்.ஏ.க்களுக்கும் மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 495 வாக்கு மதிப்பு உள்ளது.

எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் அனைவரையும் கணக்கிட்டால் இந்தியாவில் 4,896 பேர் உள்ளனர். இந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கின் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும்.

இந்த மொத்த வாக்குகளின் மதிப்பில் 51 சதவீத வாக்குகளை பெறுபவர் தான் ஜனாதிபதி பதவியை கைப்பற்ற முடியும். அதாவது மொத்த வாக்கு மதிப்பான 10 லட்சத்து 98 ஆயிரத்து 903-ல் 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 வாக்கு மதிப்புகளை பெற வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதா கூட்டணிக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் வாக்கு மதிப்புகள் உள்ளன. பெரும் பான்மையை பெறுவதற்கு இந்த வாக்கு மதிப்புகள் போதாது.

எனவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் ஒன்று மாநில கட்சிகள் உதவி செய்ய வேண்டும். அல்லது 5 மாநில தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தமான நிலைக்கு பா.ஜனதா தள்ளப்பட்டுள்ளது.

நாளை முடிவு வர இருக்கும் 5 மாநில தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 83 ஆயிரத்து 824 வாக்கு மதிப்புகளும், பஞ்சாப்பில் 13 ஆயிரத்து 572 வாக்கு மதிப்புகளும், உத்தரகாண்டில் 4 ஆயிரத்து 480 வாக்கு மதிப்புகளும், மணிப்பூரில் 1,080 மதிப்பு வாக்குகளும், கோவாவில் 800 மதிப்பு வாக்குகளும் இருக்கின்றன.

மொத்தத்தில் 5 மாநிலங்களிலும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 756 வாக்கு மதிப்புகள் உள்ளன. இதில் 80 சதவீத வாக்கு மதிப்புகளை பெற்றால் மட்டுமே பா.ஜனதா தலைவர்கள் சற்று நிம்மதியாக இருக்க முடியும்.

ஆனால் கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் பா.ஜனதாவுக்கு உத்தரபிரதேசத்தில் சுமார் 60 தொகுதிகளிலும், உத்தர காண்ட் மாநிலத்தில் சுமார் 20 தொகுதிகளிலும் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதே சமயத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில் கூடுதல் இடங்கள் கிடைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு இல்லை. எனவே தற்போது இருக்கும் வாக்கு மதிப்புகளை விட மேலும் வாக்கு மதிப்புகள் பா.ஜ.க. வசம் குறைந்து போகவே வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற மேல் சபையில் வரும் ஜூன் மாதத்திற்குள் சுழற்சி முறைக்கான புதிய எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழகத்தில் வரும் ஜூன் மாதம் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த 6 பதவிகளில் 4 அல்லது 5 பதவிகள் தி.மு.க. கூட்டணிக்கு சென்றுவிடும்.

இப்படி பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலம் குறைய உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மாநில கட்சிகளை தேடிச் செல்வதை தவிர பா.ஜனதாவுக்கு வேறு வழியில்லை.

நாடு முழுவதும் தற்போது மாநில கட்சிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள்தான் ஜனாதிபதி தேர்தலில் முடிவை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாக 5 மாநில தேர்தல் ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.