5 நாளில், ரூ.100 கோடி! – மதுரை ரெயில்வே கோட்டம் சாதனை

மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மானாமதுரை போன்ற ரெயில் நிலையங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து ரசாயன உரம், நிலக்கரி, வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்கள் மானாமதுரையிலிருந்து மரக்கரி ஆகியவை அனுப்பப்படுகிறது.

இதன் மூலம் சரக்கு போக்குவரத்து வருமானம் கடந்த 5 மாதங்களில் ரூபாய் 100.5 கோடியை எட்டியுள்ளது. 324 சரக்கு ரெயில் பெட்டி தொடர்கள் மூலம் 9 லட்சம் டன் சரக்குகள் கடந்த ஐந்து மாதங்களில் ரெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 37 ரெயில் பெட்டி தொடர்கள் மூலம் நிலக்கரி அனுப்பியதால் கிடைத்த வருமானம் 12 கோடி. அது இந்தாண்டு 73 ரெயில் பெட்டி தொடர்கள் மூலம் நிலக்கரி அனுப்பியதில் வருமானம் ரூபாய் 24 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல டிராக்டர்கள் அனுப்பியதில் கடந்த ஆண்டு வருமானம் ரூபாய் 5.4 கோடி. அது இந்தாண்டு ரூபாய் 6.4 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் சரக்கு போக்குவரத்து வருமானத்தை அதிகரிக்க மதுரை கோட்ட வர்த்தக வளர்ச்சி குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த தொடர் முயற்சியின் வாயிலாக ஒரு புதிய சரக்கு போக்குவரத்து மதுரை கோட்டத்திற்கு கிடைத்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள ராஜ்நந்தகான் என்ற ரெயில் நிலையத்திற்கு புண்ணாக்கு மூட்டைகள் ரெயில் மூலம் செவ்வாயன்று அனுப்பப்படுகிறது. இதன் மூலம் ரூபாய் 32.5 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools