Tamilசெய்திகள்

5 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் புறப்பட்டார்

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசினார். தேர்தல் முடிந்து வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதை அறிந்ததும் கூட்டணி கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், வேட்பாளர்களை சந்தித்து பேசினார்.

கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் வழக்கமான வளர்ச்சித் திட்ட பணிகளை முழுமையாக செய்ய இயலாது என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் பயணமாக இன்று காலை கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் அவரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தனி விமானம் மூலம் குடும்பத்துடன் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றுள்ளார். 5 நாள் பயணமாக குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்றுள்ள அவர் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.