Tamilசெய்திகள்

5 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியது

 

பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட 200 வார்டுகளுடன் செயல்படுகிறது. சுமார் 80 லட்சம் மக்கள் சென்னை மாநகர எல்லைக்குள் வசிக்கிறார்கள்.

இவர்களின் அடிப்படையான தேவைகள், வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. மேலும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாநகராட்சிக்கு புதிதாக கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேயர், துணை மேயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளனர். புதிய மாமன்ற கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் துறை அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டு பட்ஜெட் பணிகளை விரைவு படுத்தியுள்ளார்.

துறை வாரியாக அதிகாரிகளிடத்தில் புதிய திட்டங்கள், நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சிங்கார சென்னை 2.0 திட்டம், புதிய மேம்பாலங்கள், மழை நீர் கால்வாய்கள், ஸ்மார்ட் சிட்டி, கழிவு நீர் கால்வாய்கள் போன்றவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பருவமழையின் போது மழைநீர் தேங்கிய பகுதிகளில் இனிவரும் காலங்களில் மழை சீராக வெளியேறி செல்ல எடுக்கப்பட்ட திட்டத்தை விரைவுபடுத்துதல், கல்வி, வரி சீரமைப்பு செய்தல் போன்ற பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

5 ஆண்டுகளுக்கு பிறகு மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற இந்த பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள், நகரை அழகு படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தை வருகிற 21-ந்தேதிக்குள் கூட்டி தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள்ளாக பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டம் நடத்துவதற்கு முன்பாக நிலைக்குழு தலைவர்கள், மண்டலக்குழு தலைவர்கள் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி தேர்வு செய்யப்பட்டால் நிதிக்குழு தலைவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

ஒருவேளை நிலைக்குழு தலைவர்கள் தேர்தல் தாமதமாக நடந்தால் மேயரே பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் வாய்ப்பு உள்ளது.