5 முன்னணி பிரபலங்கள் குரலில் வெளியாகும் ‘பொன்னியின் செல்வன்’ டிரைலர்

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் திரைபிரபலங்கள் பலரின் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்து படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகவுள்ள டிரைலருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள திரைபிரபலங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஒரு டிரைலர் 5 புகழ்பெற்ற குரல்களில் என்று குறிப்பிட்டு தமிழில் கமல்ஹாசன், இந்தியில் அனில்கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் கைக்கினி குரல் கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.