5வது முறையாக ரெப்கோ வட்டி குறைப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
அவ்வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக குறைந்துள்ளது. இதன்மூலம் 5 முறை தொடர்ந்து ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 6.1 சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. மேலும், 2020-21ம் ஆண்டில் வளர்ச்சி 7.2 சதவீதமாக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதம் குறைப்பால், வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.