5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!
அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2009-ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும் அதற்கு முன்னதாக பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு பெரிய அளவில் இருந்து வருவதே இந்த போராட்டத்திற்கு காரணம்.
ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24-ந்தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியைகள், கைக் குழந்தைகள் மற்றும் தங்கள் கணவர்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கொட்டும் பனியையும், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று 5-வது நாளாக இரவு- பகலாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்கள் பலர் உடல் நிலையில் சோர்வுற்றனர். ஆரம்பத்தில் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து வந்ததால் 100-க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர்.
இப்போது தண்ணீர் மட்டும் குடித்து கொண்டே உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் சம்பவ இடத்தில் போலீசாரும், மருத்துவ குழுவினரும் குவிக்கப்பட்டனர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் சோர்வுற்று மயங்கினர். அவர்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். நேற்று இரவு வரை 180 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலும் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திலும் ‘ட்ரிப்ஸ்’ ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் 5 பேர் இன்று காலையில் மயக்கம் அடைந்தனர். அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஆசிரியர் சதாசிவம், ஆசிரியைகள் தமிழ்செல்வி, பூமணி, கிருஷ்ணவேணி, முத்துமாரி ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அவர்களின் உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து அங்கேயே குளுக்கோஸ் ஏற்றினர். போராட்ட களத்தில் முதல் உதவி அளிக்கும் வகையில் குளுக்கோஸ் ஏற்றவும் அதனை தொங்கவிடவும் தேவையான இரும்பு ஸ்டேண்ட் இல்லாததால் குளுக்கோஸ் பாக்கெட்டினை சக ஆசிரியர்கள் கையில் பிடித்து கொண்டனர். ஒரு சிலரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர் குழு அறிவுறுத்தியதால் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வந்தாலும் உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
கைக்குழந்தைகளுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள் தங்கள் குழந்தைகளுக்கு மட்டும் உணவு வாங்கி கொடுத்து விட்டு அவர்கள் பட்டினியாய் இருக்கிறார்கள். ஒரு சிலர் தங்கள் பெற்றோர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கொசுக்கடியிலும், குளிரிலும் குழந்தைளுடன் உண்ணாவிரதத்தில் இருந்து வரும் ஆசிரியைகளின் நிலைமை பரிதாபமாக இருந்தது. பந்தலோ, பாயோ எதுவும் இல்லாமல் தரையிலேயே படுத்து தூங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
போராட்டத்தில் அதிகளவு பெண்கள் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அளவு கழிவறை வசதி கூட செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் கூறியதாவது:-
ஒரே தகுதியுடைய ஒரே வேலை செய்யக் கூடிய ஆசிரியர்களுக்கு வெவ்வேறு விதமான ஊதியம் வழங்குவதை எதிர்த்துதான் போராடுகிறோம். இந்த ஊதிய வித்தியாசம் ரூ.15 ஆயிரம்வரை உள்ளது. சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில்தான் போராடுகிறோம்.
நியாயமான எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். பள்ளி விடுமுறை முடிந்தாலும் கூட போராட்டம் தொடரும் என்றார்.
இதற்கிடையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள் தங்களுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் அரசு வழங்குவதால் அதனை சித்தரிக்கும் வகையில் டி.பி.ஐ, வளாகத்தில் துப்புரவு பணியிணை மேற்கொண்டனர்.