X

5வது தமிழ்நாடு பிரிமீரியர் லீக் கிரிக்கெட் – 633 வீரர்கள் பதிவு

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 10-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கனவே ஆர்.அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளிவிஜய், வாஷிங்டன் சுந்தர், கவுசிக்காந்தி, அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, டி.நடராஜன், பாபா அபராஜித் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தக்க வைக்கப்பட்ட நிலையில் அணிக்கு தேவையான எஞ்சிய வீரர்களை ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது.

ஒதுக்கீடு பட்டியலில் மொத்தம் 633 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தகுதிக்கு ஏற்ப 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ பிரிவில் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் வாய்ந்த விஜய் சங்கர், அபினவ் முகுந்த் ஆகியோர் மட்டும் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கான ஊதியம் ரூ.6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி1 மற்றும் பி2 பிரிவில் முதல்தர போட்டிகள் மற்றும் குறைந்தது 20 டி.என்.பி.எல். ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும். இவர்களின் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் ஆகும். இந்த பிரிவில் 58 வீரர்கள் உள்ளனர். சி பிரிவில் 573 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள். இவர்களுக்கான தொகை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் ஆகும்.

ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவரான விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (448 ரன்), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான வேகப்பந்து வீச்சாளர் ஜி.பெரியசாமி (21 விக்கெட்) ஆகியோர் வீரர்கள் தேர்வில் முக்கியமானவர்களாக உள்ளனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 22 வீரர்களையும், குறைந்தபட்சமாக 16 வீரர்களையும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் இரண்டு அணிகள் புதிய பெயருடன் களம் இறங்குகின்றன. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சேலம் ஸ்பார்டன்ஸ் என்றும், காரைக்குடி காளை அணி திருப்பூர் தமிழன்ஸ் என்றும் பெயரை மாற்றியுள்ளன.

மேலும் இந்த முறை சேலம் மற்றும் கோவையிலும் டி.என்.பி.எல். போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் கூறுகையில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட்டை சேலம் மற்றும் கோவைக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திண்டுக்கல் மற்றும் நெல்லையில் கிடைத்த மகத்தான வரவேற்பால் நாங்கள் ஊக்கப்படுத்தப்பட்டு உள்ளோம். ஆனால் இந்த ஆண்டு சென்னையில் எந்த ஆட்டங்களும் நடைபெறாது’என்றார்.

Tags: sports news