Tamilசெய்திகள்

5ஜி தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட இந்தியா – பின்லாந்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி பெட்ரி ஹொன்கோனென், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு துறை சார்ந்த குழுவினரும் கலந்து கொண்டனர்.

பின்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுடன் ஆராய்ச்சி பணிகளில் இணைந்து செயல்பட இந்தியா ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் அப்போது தெரிவித்தார். குறிப்பாக சென்னை ஐஐடி உட்பட 4 இந்திய கல்வி நிறுவனங்கள், பின்லாந்து நிறுவனங்களுடன் குவாண்டம் கணினி மேம்பாட்டு பணிகளுக்காக இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.

5ஜி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை தொழில்நுட்பங்கள், உயிரி சார்ந்த பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் செயல்பட பின்லாந்து ஆர்வமாக உள்ளது என்று ஹொன்கோனென் உறுதி அளித்தார்.

அறிவியல், புதுமை கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், எதிர்கால மொபைல் தொழில் நுட்பம், டிஜிட்டல் கல்வி உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது. மேலும் சர்வதேச நலன் சார்ந்த விஷயங்களில் இணைந்து செயல்படவும் இந்தியாவும், பின்லாந்தும் ஒப்பு கொண்டன.