X

5ஜி தொழில்நுட்பத்தால் விமான பயணத்துக்கு ஆபத்து? – அமெரிக்கா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

5ஜி தொழில்நுட்பம் பயம் காரணமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் 2-வது நாளாக இன்று ரத்து செய்யப்ப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பல நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் 5ஜி சேவையால் கொரோனா பரவுகிறது என்றும், பறவைகளுக்கு ஆபத்து என்றும் செய்தி பரப்பப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் அதிவேக திறன் கொண்ட 5ஜி செல்போன் தொழில்நுட்பத்தை தொலை தொடர்பு நிறுவனங்கள் நேற்று அறிமுகப்படுத்தின.

இதையடுத்து அதிவேக 5ஜி தொழில்நுட்பத்துக்காக நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.

விமானம் பறக்கும் உயரத்தை அறிய முடியாமல் விமானிகள் திணறுவார்கள் என்றும், ஓடுபாதைக்கு அருகே செல்போன் கதிர்வீச்சு இருக்கும்போது, விமானம் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டன. மேலும் 5ஜி தொழில்நுட்பத்தால் முக்கிய கருவிகள் செயலிழந்து விடும் என்றும் கூறப்பட்டது.

இந்த காரணங்களால், இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமான போக்குவரத்தை நேற்று முதல் ரத்து செய்துள்ளன.

விமான நிறுவனங்கள் முன்கூட்டியே அறிவிக்காமல், திடீரென விமானங்களை ரத்து செய்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.