49 பேர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தி.மு.க. தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள், மத நல்லிணக்கத்தையும், சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறை பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற கலை – அறிவுலகச் சான்றோர்களை தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.
சமூக அக்கறை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேசத்துரோகிகள் என்று சொல்வதைவிடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது;
சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள், அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு கைவிலங்கு போட்டவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் முன்பு இதுவரை படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு என்பதை, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.
எனவே மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு, 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.