Tamilசெய்திகள்

48 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து! – மும்பை – பெங்களூர் தேசிய சாலையில் பரபரப்பு

மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புனே நகரில் நவல் மேம்பாலம் உள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு இந்த பாலத்தில் புனேயை நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வேகமாக சென்று கொண்டிருந்த அந்த லாரியின் டிரைவர் பிரேக் பிடித்து நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் பிரேக் பிடிக்காமல் பழுது ஏற்பட்டு இருந்தது. இதனால் அந்த டேங்கர் லாரி கடும் வேகத்தில் தறி கெட்டு ஓடத்தொடங்கியது. டிரைவர் அதன் வேகத்தை குறைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. அந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை இடித்து தள்ளிக்கொண்டு சென்றது.

அடுத்தடுத்து பல வாகனங்களை அந்த லாரி இடித்து தள்ளியது. அந்த லாரி மோதிய வேகத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று வேகமாக மோதின. இதனால் அந்த வாகனங்களில் இருந்தவர்கள் அலறினார்கள். மொத்தம் 48 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி நொறுங்கின. டேங்கர் லாரி மோதிய வாகனங்கள் கடுமையாக சேதம் அடைந்தன. மற்ற வாகனங்கள் பின்பகுதியிலும், முன் பகுதியிலும் நொறுங்கி ஒன்றன் மீது ஒன்று சாய்ந்த நிலையில் இருந்தன. இதன்காரணமாக நீண்ட தொலைவிற்கு பாலத்தின் இறக்கத்தில் வாகனங்கள் மோதி நின்றன. அதிர்ஷ்ட வசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட வில்லை. ஆனால் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் புனேயின் பல்வேறு பகுதியில் இருந்தும் தீயணைப்பு படை வீரர்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கி கிடந்த 48 வாகனங்களையும் போராடி அகற்றினார்கள். இதனால் அந்த பாலம் பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பல மணிநேரத்திற்கு அந்த பகுதி முழுக்க கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெங்களூர்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் அடைந்த 30 பேரில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்தில் நொறுங்கிய 48 வாகனங்களில் 30 கார்கள் ஆகும், 2 ஆட்டோ, மற்றவை வேன்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.