45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கட்டாயம்
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு ஊசி போடப்படுகிறது. இவ்வாறு 3 கோடி பேருக்கு ஊசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 1 கோடியே 30 லட்சத்து 67 ஆயிரத்து 47 பேருக்கு ஊசி போடப்பட்டுள்ளது.
அடுத்ததாக மார்ச் 1-ந்தேதி முதல் 65 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ஊசி போடப்படுகிறது. இதற்காக விரிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஊசி போடும் பணியை செய்கின்றன. அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டு மல்லாமல் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஊசி போட அனுமதிக்கப்படுகிறது.
இதற்காக எந்தெந்த ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களும் வெளியிடப்பட இருக்கின்றன.
65 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் சேர்த்து இதய நோய், காசநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட மற்ற நோய் பாதிப்புக்குள்ளான 45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிட இருக்கிறது.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு என்ன நோய் இருக்கின்றது என்ற விவரங்கள் அடங்கிய மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக வழங்க வேண்டும். இந்த மருத்துவ சான்றிதழ் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்பது மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறையில் வெளியிடப்படும்.
அவர்கள் அனைவரும் மத்திய அரசு உருவாக்கி உள்ள ‘‘கோவின்’’ செயலியில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் அட்டை, போட்டோ மருத்துவ சான்றிதழ் விவரங்களை அதில் இணைக்க வேண்டும்.
அதன்பிறகு அதை சம்மந்தப்பட்ட பணியாளர்கள் பரிசீலனை செய்வார்கள். அதைத்தொடர்ந்து அந்த நபருக்கு எந்த மையத்தில் ஊசி போடப்படும், எப்போது ஊசி போடப்படும் என்ற விவரங்கள் அனுப்பப்படும்.
அதை வைத்து குறிப்பிட்ட மையத்தில் ஊசி போட்டுக் கொள்ளலாம். அரசு ஆஸ்பத்திரிகளில் ஊசி போட்டுக் கொள்வதற்கு கட்டணம் கிடையாது. தனியார் ஆஸ்பத்திரிகளில் ஊசி போடவேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான கட்டண விவரம் குறித்தும் மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் செயலியில் பதிவு செய்வது கடினம் என்பதால் வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இது சம்மந்தமாக மத்திய சுகாதாரத்துறை நேற்று மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.
தடுப்பூசி போடுவதை பிரதம மந்திரி ஆரோக்கிய யோஜனா திட்டம் மற்றும் மத்திய அரசு சுகாதார திட்டங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.