நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜனதாவின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். சிக்மங்களூர் பிரஸ் கிளப்பில் பேசிய பிரகாஷ் ராஜ், பா.ஜனதா 400 இடங்ளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனக்கூறி வருவதை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
420 (மோசடி) செய்தவர்கள் மட்டுமே தேர்தலில் 400 இடங்களை பிடிப்பதை பற்றி பேசி வருகிறார்கள். காங்கிரஸ் அல்லது மற்ற கட்சிகளாக இருந்தாலும் சரி, அவ்வாறு தெரிவித்தால், அது அவர்களின் ஆணவத்தை பிரதிபலிப்பதாகும்.
மக்கள் வாய்ப்பு அளித்தால் மட்டுமே நீங்கள் உங்களுடைய ஒரு தொகுதியில் வெற்றிபெற முடியும். இத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என எந்தவொரும் கட்சியும் கூற முடியாது. அப்படி கூறும் என்றால் அது அவர்களின் ஆணவம்.
இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “எங்களுடைய 3-வது தடவையான ஆட்சி வெகு தூரத்தில் உள்ளது. அதிகபட்சமாக 100 முதல் 125 நாட்கள் உள்ளது. ஒட்டுமொத்த நாடும் 400 இடங்கள் எனச் சொல்கின்றன. மல்லிகார்ஜுன கார்கே கூட இதைச் சொல்கிறார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கார்கே “பா.ஜனதா தற்போதே மெஜாரிட்டியுடன் இருக்கிறது. இது மக்களவை தேர்தலில் 400 இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது” என்றார். இதற்குதான் மோடி மேற்கண்டவாறு கூறியிருந்தார்.