தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் வருகிற ஜூலை 5-ந்தேதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை வருகிற ஜூலை 6-ந்தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி தேதி கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை இருப்பின், அவர்கள் வருகிற 15-ந்தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி வருகிற 15-ந்தேதியாகும். அன்று மற்றும் அதற்கு பிறகோ இருப்பின் அவர்கள் தங்களுக்குரிய கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும். அவர்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.
தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அழத்த நுகர்வோர்களை பொருத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் துண்டிப்பிற்கான உரிமையை விட்டு கொடுத்ததினால் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின்கட்டணத்தை முறையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செலுத்தாமல் இருந்தால், அந்த உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் தங்களது கட்டணத்தை வருகிற 15-ந்தேதிக்குள் செலுத்தலாம். அவர்களுக்கு மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மே மாத உயர் மின்னழுத்த மின் கட்டணத்தை நுகர்வோர்கள் அந்த மாதத்திற்கான குறிப்பிட்ட கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.