4 மொழிகளில் நேரடியாக ஒடிடியில் வெளியாகும் டாக்டர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது.

இந்நிலையில், டாக்டர் படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.