X

35 பகுதிகளில் வடியாத வெள்ள நீரை இன்று வெளியேற்றி விடுவோம் – மாநகராட்சி கமிஷ்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையை புரட்டிப் போட்ட ‘மிச்சாங்’ புயல் மழையால் 5 நாட்கள் ஆகியும் வெள்ளம் ஒரு சில பகுதிகளில் வடியவில்லை. வடசென்னை மற்றும் தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கவும், தண்ணீரை வெளியேற்றவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெள்ளம் பாதித்த பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டது. தாழ்வான பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்டது. மீத முள்ள பகுதிகளில் இரவு, பகலாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று இரவு வரை 97 பகுதிகளில் வெள்ளம் நீர் வடியாமல் இருந்தது. இன்று காலையில் அது 56 ஆக குறைந்தது. சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அதில் 300-க்கும் குறைவான தெருக்களில் மட்டுமே இன்னும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளம் வடியாத பகுதிகளில் கூடுதல் மோட்டார் பம்ப் செட்டுகள், அமைக்கப்பட்டு வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் 363 பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருந்தது. விடிய, விடிய நடந்த நடவடிக்கையின் மூலம் 328 இடங்களில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் 35 பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை இன்று இரவுக்குள் வெளியேற்றி விடுவோம். நிலைமை சீராகி விடும்.

வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அனைத்து சுரங்கப்பாதையிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. 1178 மோட்டார் பம்புகள் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போர்க் கால அடிப்படையில் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்கள் தவிர பிற பகுதிகள் அனைத்திற்கும் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. டிவிசன்கள் 7, 19, 20, 23, 29, 30, 34, 53, 151, 156, 174, 177, 189, 181, 183, 193, 198 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags: tamil news