X

34 வருட சாதனையை முறியடித்த இந்திய கிரிக்கெட் அணி

வெஸ்ட் இண்டீஸ் -இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று முன் தினம்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 115 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ஷ்ரேயாஸ் அய்யர், சாம்சன், அக்‌ஷர் படேல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது. வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அக்‌ஷர் படேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 35 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரியும் 5 சிக்சரும் அடங்கும்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. போர்ட் ஆஃப் ஸ்பெயின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் 311 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் இந்திய அணி 34 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது.

1988-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 272 ரன்கள் சேசிங் செய்திருந்தது. அந்த சாதனையை ஷிகர் தவான் தலைமையில் இந்திய அணி முறியடித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3-வது அதிகபட்ச ரன்களை இந்திய அணி சேசிங் செய்துள்ளது. 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணி 360 ரன்களை சேசிங் செய்து முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் இலங்கை அணியும் (312) உள்ளது குறிப்பிடத்தக்கது.