X

3 வது அலையை தடுக்க இதை இன்னும் சில மாதங்களுக்கு செய்ய வேண்டும் – விஞ்ஞானி டாக்டர் சவுமியா

உலக சுகாதார அமைப்பின் (டபுள்யூ.எச்.ஓ.) தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வின்படி (ஐ.சி.எம்.ஆர்.) ஜூலை மாதத்தில் 65 சதவீதம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உண்டாகியிருக்கிறது. இதுதவிர இந்தியாவில் 60 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் ஓரளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்துள்ளது.

3-வது அலை வராமல் தடுக்க தடுப்பூசியை அதிகரிப்பதோடு, முகக்கவசம் அணிவது, கூட்டம் சேராமல் இருப்பது, காற்றோட்டமான இடத்தில் இருப்பது, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது என்பது போன்ற தனிமனித பாதுகாப்பை இன்னும் சில மாதங்களுக்கு தொடர வேண்டும்.

எல்லோருக்கும் 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி கிடைக்கும் வரை அதாவது இன்னும் 4 மாதங்கள் வரை தனிமனித பாதுகாப்பை தொடர வேண்டும். அப்படி தொடர்ந்தால் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்கலாம். கொரோனா வைரசை முற்றிலுமாக அழிப்பதற்கான முயற்சிகள் தற்போது இல்லை. அதனுடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எவ்வளவோ வைரஸ்கள் இருக்கின்றன. அவற்றைக் கையாள்கிறோம். அவற்றை நம் வாழ்க்கையில் ஒன்றாக ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக நம்முடைய வாழ்க்கையை நிறுத்துவது கிடையாது. அதேபோல் கொரோனா வைரசும் அதில் ஒரு பங்காக இருந்துவிடும்.

மற்ற வைரஸ்களை கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் அதற்கான மருந்துகள், தடுப்பு பொருட்கள் இருக்கின்றன. கொரோனா வைரசுக்கும் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. எனவே அதனை வைத்து நம்முடைய சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி வரலாம்.

உலக சுகாதார அமைப்பின் மூலம் அதிக முறை கூறியிருக்கிறோம். கொரோனா வைரஸ் குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கும் என்று அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. உலகில் மூத்த வயதில் இருப்பவர்களிடம் இருந்துதான் தடுப்பூசி போட ஆரம்பித்தோம். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. சிறுவர்களுக்கு இதுவரை தடுப்பூசி கிடைக்கவில்லை.

குழந்தைகள், சிறுவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நோயின் தாக்கம் அவர்களுக்கு குறைவாகத்தான் இருக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. சிறுவர்களில் 1 சதவீதம் பேர்தான் மருத்துவமனையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களில் ஒரு சதவீதம் பேருக்குத்தான் இறப்பு வருகிறது. அதுவும் அரிதான ஒன்றாகத்தான் இருக்கும். அதனால் குழந்தைகள், சிறுவர்களுக்கு தொற்று ஏற்படலாம். ஆனால் நோயின் தாக்கம் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

ஜூலை மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) எடுத்த ஆய்வின்படி, பெரியவர்களுக்கு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் அதே சதவீத அளவில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

குழந்தைகள், சிறுவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என பள்ளிகளை மூடிவைத்தோம். ஆனால் அவர்கள் மற்ற காரியங்களுக்காக வெளியில் செல்லத்தான் செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு தொற்று ஏற்படத்தான் செய்கிறது. பள்ளிகள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு இல்லை. பள்ளிகளில் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகள் இருக்கின்றன. 2 தடுப்பூசிகள்தான் குழந்தைகளுக்கு செலுத்த ஒப்புதல் ஆகி இருக்கிறது. பைசர், மாடர்னா ஆகிய 2 தடுப்பூசிகள் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தடுப்பூசிக்கு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. புள்ளி விவரங்கள் இதுவரை வரவில்லை. குழந்தைகளில் ஏற்கனவே நுரையீரல், இதயம், புற்றுநோய் பாதிப்பு யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டு இருக்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு இப்போதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் பலருக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் 40 சதவீதம் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கான வசதிகள் கிடைக்கவில்லை. அதனால்தான் பள்ளிகளை திறக்க அறிவுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.