Tamilவிளையாட்டு

3 முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவாகிப் போனது – தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் கருத்து

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்து தொடர்ச்சியாக 6-வது வெற்றியை பெற்றதுடன் அடுத்து சுற்றுக்கும் (பிளே-ஆப்) முன்னேறியது. இதில் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (54 ரன், 39 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), விராட் கோலி (47 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோரது அதிரடியுடன் பெங்களூரு நிர்ணயித்த 219 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 191 ரன்களே எடுத்தது.

சென்னை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய 4 அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்ற போதிலும் பெங்களூரு ரன்ரேட்டில் முந்தியது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், ‘ஆடுகளம் நன்றாகவே இருந்தது. பந்து சற்று நின்று வந்தது. என்றாலும் 200 ரன் என்பது எட்டக்கூடியவை தான். சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்ததால் இலக்கை விரட்டிப்பிடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் சில பந்துகளை அடிக்க முடியாதது குறித்து கேட்கிறீர்கள். 20 ஓவர் கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம். கடந்த ஆண்டு எங்களது கடைசி நாக்-அவுட் போட்டியை போலவே 2 பந்தில் 10 ரன் தேவை என்ற சூழல் உருவானது. ஆனால் இந்த தடவை நினைத்த மாதிரி முடிவு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்த சீசனை எடுத்துக் கொண்டால் 14 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றது மகிழ்ச்சியே. என்றாலும் இந்த ஆண்டில் முதல் ஆட்டத்தில் இருந்தே நிறைய சவால்களை சந்தித்தோம். 3 முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவாகிப் போனது. காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே வர முடியாமல் போனது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா (6 ஆட்டத்தில்13 விக்கெட்) காயமடைந்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் (9 ஆட்டத்தில் 14 விக்கெட்) சர்வதேச போட்டிக்காக தாயகம் திரும்பியதால் கடைசி கட்டத்தில் அவரை தவற விட்டோம். வீரர்கள் காயமடையும் போது, ஒவ்வொரு ஆட்டத்திலும் சரியான கலவையில் அணியை தேர்வு செய்வது கடினமாகி விடும்’ என்றார்.