3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க ஆட்சி அமைக்கும் – ராம்தாஸ் அத்வாலே

கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சமீபத்தில் கவிழ்ந்தது. அங்கு பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது. 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதற்கு பா.ஜனதாவே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது.

இந்த நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ் தான் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சியின் தலைவரான அவர் இதுதொடர்பாக ஜெய்ப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அங்கு பா.ஜனதா அரசு அமைத்துள்ளது.

இதேபோல மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலக விரும்புவதாக நான் கருதுகிறேன். இதனால் இந்த 3 மாநிலத்திலும் விரைவில் பா.ஜனதா ஆட்சி அமையும்.

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் 99.99 சதவீதம் நம்பிக்கை வைத்திருப்பதை தான் இது காட்டுகிறது.

இவ்வாறு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடந்தது. அந்த 3 மாநிலத்திலும் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அல்லது அதைவிட கூடுதலாக ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools