3 மாதங்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் – அமித்ஷா அறிவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்‌ஷா கலந்துகொண்டு பேசியதாவது:-

அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கூட அயோத்தி வழக்கின் தீர்ப்பை கேட்கவில்லை. இது அவர்களது ராமர் கோவில் பற்றிய உண்மையான புரிதலை காட்டுகிறது. ஆனால் கோர்ட்டு தனது தீர்ப்பை வெளியிட்டுவிட்டது. எனவே இப்போது பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும். இப்போதும் காங்கிரஸ் அரசு இருந்தால் இந்த கோவிலை கட்டுவதற்கு அவர்கள் அனைத்து வகையிலும் இடையூறு செய்வார்கள். ஆனால் நான் இப்போது உறுதி அளிக்கிறேன், 3 மாத காலத்தில் வானுயர்ந்த ராமர் கோவில் கட்டப்படும்.

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களை குழப்ப முயற்சிக்கின்றன. இந்த புதிய சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு மட்டுமே, பறிப்பதற்காக அல்ல.

அந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியவன் நான்தான், எனவே நான் சவால் விடுக்கிறேன். யார் வேண்டுமானாலும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து என்னுடன் விவாதிக்கலாம். எக்காரணம் கொண்டும் இந்த சட்டத்தை திரும்பப்பெற முடியாது.

இவ்வாறு அமித்‌ஷா பேசினார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools