ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்நடவடிக்கையால் இந்த 3 கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துவக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும் நிலைமை உருவாகி இருக்கிறது.
பேராசிரியர் மற்றும் மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு, சிசிடிவி கேமராக்கள் போன்றவை முறையாக இல்லாததும், பராமரிக்கப்படாததும் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்குக் காரணம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது.
மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. எனவே ஒன்றிய அரசு, சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேணடும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.