Tamilசெய்திகள்

3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு – ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது

சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில்சந்த் (வயது74), அவரது மனைவி புஷ்பாபாய் (70), மகன் ஷீத்தல்குமார் (40) ஆகியோர் கடந்த 11-ந்தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய புலன் விசாரணையில், ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா(30), அவரது சகோதரர்கள் உள்பட 5 பேரை கொலை செய்துவிட்டு காரில் தப்பியது தெரிய வந்தது.

காசிமேடு இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான தனிப்படை போலீசார், புனே நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் காரில் விரட்டி சென்று ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவரது நண்பர்கள் விஜய்உத்தம், நவீந்திரநாத்கர் ஆகியோர் சென்ற காரை மடக்கி பிடித்தனர். பின்னர் சென்னை அழைத்துவரப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்களிடம் 10 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஷ், கூட்டாளி ராஜீவ் ஷிண்டே ஆகியோர் டெல்லியில் பதுங்கி இருப்பதை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி போலீசார் உதவியுடன் 3 பேரையும் கைது செய்தனர்.

கைதான 3 பேரும் ஆக்ரா கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். ஜெயமாலா உள்பட 3 பேருக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி கொடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜூவ் துபேவை யானைகவுனி போலீசார் கைது செய்தனர்.