3 பேருக்காக தனி விமானமா? – நடிகர் அக்ஷய் குமார் விளக்கம்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய்குமார். இவர் தமிழில் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், தனது தங்கை மற்றும் அவரது குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்ய, அந்த விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் அக்ஷய்குமார் புக் செய்ததாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் அப்படி செய்ததாகவும் செய்திகள் வலம்வந்தன.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: “எனது தங்கை அவரது குழந்தைகளுடன் செல்ல நான் முழு விமானத்தையும் புக் செய்ததாக வெளியான செய்தி முற்றிலும் போலியானது. லாக்டவுன் போடப்பட்டதில் இருந்து அவர் எங்கும் பயணம் செய்யவில்லை. மேலும் அவருக்கு இருப்பது ஒரே ஒரு குழந்தை தான். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.