X

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை – சபாநாயகரின் நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை

அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன், பிரபு ஆகியோர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் மனு அளித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்தனர்.

மேலும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சபாநாயருக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம், 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் இப்போதைக்கு தகுதிநீக்க நடவடிக்கைகளை எடுக்க முடியாது.