Tamilசெய்திகள்

3வது தவணை தடுப்பூசிக்கான இடம் மற்றும் நேரம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கின

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு வருகிற 10-ந் தேதிமுதல் 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது.

இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் பிரதமர் மோடி வெளியிட்டார். வெளிநாடுகளில் 3-வது தவணை தடுப்பூசி பூஸ்டர் தடுப்பூசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதை முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்று வகைப்படுத்தி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே 2 தவணைகளில் எந்தவகை தடுப்பூசியை போட்டுக்கொண்டார்களோ அதே வகை தடுப்பூசியை தான் 3-வது முறை போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே 3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக நேரத்தையும், இடத்தையும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணையதளம் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு எந்த நேரம் உகந்ததாக இருக்குமோ அதை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இதற்காக இணையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) மாலை முதல் நேரத்தையும், இடத்தையும் ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி, விவரங்களை அதில் பெறலாம். அதிலேயே குறிப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.

வருகிற 10-ந்தேதி தடுப்பூசி முகாம்கள் எங்கெங்கு செயல்படுகிறதோ அவற்றில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு வசதியான முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்தும் பட்டியலில் சுமார் 6 கோடி பேர் உள்ளனர். இந்த 6 கோடி பேருக்கும் வருகிற மார்ச் மாதத்துக்குள் 3-வது தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.