X

29 நாட்கள் சட்டசபை நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு தகவல்

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் கோட்டையில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ஜனதா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் யாரும் வரவில்லை.

கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13-ந்தேதி கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட் காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களின் இருக்கை முன்பு வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் திரைகளில் தெரியும்.

இது தவிர எம்.எல்.ஏ.க்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும். அதை புத்தகத்தை புரட்டுவது போல் பட்ஜெட் அறிக்கை பக்கங்களை பார்த்துக் கொள்ளலாம்.

மறுநாள் (14-ந்தேதி) வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இந்த இரண்டு பட்ஜெட்கள் மீதும் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் விவாதம் நடைபெறும். அதன் பிறகு 2 அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள்.

23-ந்தேதி முதல் மானிய கோரிக்கைகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்வார்கள். 23 நாட்கள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். மொத்தம் 29 நாட்கள் சட்டசபை நடைபெறும்.

இவ்வாறு அப்பாவு கூறினார்.

அ.தி.மு.க. சார்பில் யாரும் வராதது ஏன்? என்ற கேள்விக்கு இன்று அவர்களுக்கு வசதி பட்டிருக்காது என்றார்.

ஆகஸ்டு 13-ந் தேதி முதல் செப்டம்பர் 21-ந் தேதி வரை சட்டசபை நிகழ்ச்சி நிரல் வருமாறு:-

13-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல், 14-ந் தேதி வேளாண் பட்ஜெட், 16-ந் தேதி இரங்கல் தீர்மானம், பட்ஜெட் விவாதம் தொடக்கம். 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பட்ஜெட்கள் மீதான விவாதம் நீடிப்பு மற்றும் பதில் உரை.

20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை அரசு விடுமுறை. 23-ந் தேதி மானிய கோரிக்கைகளின் மீது விவாதம் தொடங்குகிறது. எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறைமீது விவாதம் நடக்கும் என்ற விவரம் வருமாறு:-

23-ந் தேதி நீர்வளத்துறை, 24-ந் தேதி நகராட்சி நிர்வாகம், 25-ந் தேதி ஊரக வளர்ச்சித்துறை, 26-ந் தேதி கூட்டுறவு, 27-ந் தேதி கல்வித்துறை, 28-ந் தேதி நெடுஞ்சாலைத்துறை, 29, 30 விடுமுறை.

31-ந் தேதி வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம். ஆகஸ்டு 1-ந் தேதி வருவாய் துறை, 2-ந் தேதி தொழில்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, 3-ந் தேதி வீட்டுவசதித்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை, 4-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, 5-ந் தேதி விடுமுறை.

6-ந் தேதி மருத்துவம், 7- ந்தேதி வனம், 8-ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, 9-ந் தேதி கைத்தறி, வணிகவரித்துறை, 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை. 11, 12 அரசு விடுமுறை.

13-ந் தேதி எரிசக்தி துறை, மதுவிலக்கு, தொழிலாளர் நலத்துறை, 14-ந் தேதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, 15-ந் தேதி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 16-ந் தேதி நீதி நிர்வாகம், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், 17-ந் தேதி போக்குவரத்துத்துறை, 18-ந் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை, 19-ந் தேதி அரசு விடுமுறை. 20-ந் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, 21-ந் தேதி பொதுத்துறை, மாநில சட்டமன்றம், அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும் நடைபெறும்.