27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
வார்டு ஒதுக்கீட்டில் அதிருப்தி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவகாரங்களால் ஒரு சில பகுதிகளில் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. மற்ற இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும் முறை பின்பற்றப்படுகிறது. வெவ்வேறு பதவிகளுக்கான 4 வாக்குச் சீட்டுகளில் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் சோதனை முறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் வரும் காலங்களில் உள்ளாட்சி தேர்தலிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 63 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தனியர் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலை மாநில தேர்தல் ஆணையர் வெப்கேமரா மூலம் பார்வையிட்டார்.