வேலூர் ஆரணி ரோட்டில் ஆர்.ஆர். அசைவ உணவகம் என்ற பெயரில் ஒரு சிறிய ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தின் உரிமையாளர் அதே பகுதியில் சற்று தள்ளி புதிய உணவகத்தை தொடங்கினார்.
அந்த புதிய உணவகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. சமீப காலமாக புதிதாக உணவகத்தை திறப்பவர்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும் உணவகத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் வித்தியாசமான சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
அதே பாணியில் இந்த உணவகத்தின் உரிமையாளரும் திறப்பு விழா சலுகையாக பழைய நாணயம் ரூ.25 பைசாவை கொடுத்து அரைபிளேட் பிரியாணி வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.
இதனால் ஓட்டலின் முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ரூ.25 பைசாவை கொடுத்து அடித்து பிடித்து பிரியாணி வாங்கி சென்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.
11 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இந்த சலுவை விலையில் பிரியாணி வழங்கப்படும் என்று உணவக உரிமையாளர் அறிவித்திருந்தார்.
அறிவித்த நேரத்திற்கு முன்பே கூட்டம் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வரிசையை ஒழுங்குபடுத்தினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே முதல் 200 பேருக்கு மட்டும் பிரியாணி கொடுத்து விட்டு உரிமையாளர் உணவகத்தை மூடினார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி டவுன் ஜண்டாமேடு பகுதியில் புதிய துணிக்கடை திறப்பு விழா நடந்தது. இதையொட்டி பழைய 5, 10 பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு ரூ.250 மதிப்புள்ள சேலை வழங்கப்படும் என அறிவித்தனர்.
பழைய 5 மற்றும் 10 பைசா நாணயங்களுடன் ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர். அதில் முதலில் வந்த 100 பேருக்கு மட்டும் ரூ.250 மதிப்புள்ள சேலை வழங்கினர்.