24 மணி நேரம் செயல்படும் லண்டன் மாசு கட்டுப்பாட்டு மண்டலம்
வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் லண்டன் அரசு, காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுப்படுவதாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து லண்டன் மேயர் சாதிக் கான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
நகரத்தின் உள்ளே இயக்கப்படும் வாகனங்களின் புகை வெளியிடும் அளவில், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 4 தர நிலையிலும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 6 தர நிலையிலும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அன்றாடம் அபராதம் விதிக்கப்படும்.
பெட்ரோல் மூலம் இயங்கும் தர நிலையற்ற கார், வேன், இருசக்கர வாகனங்கள் நாள் ஒன்றுக்கு 12.50 பவுண்ட்(இந்திய மதிப்புல் ரூ.1137) அபராதம் செலுத்த வேண்டும். லாரி, பேருந்து போன்றவை 100 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.9099) அபராதம் செலுத்த வேண்டும்.
வாகன ஓட்டுனர்கள் வண்டியின் புகை தரநிலைகளை, லண்டன் போக்குவரத்துத்துறை செயல்படுத்தும் ஆன்லைன் கருவி மூலம் சோதனை செய்து கொள்ளலாம். காற்றில் கொடிய நைட்ரஜன் ஆக்ஸைடு கலக்க அதிக அளவில் வாகனங்களின் புகையே காரணமாகும்.
எனவே, நாட்டில் ஆண்டுக்கு 20 பில்லியன் பவுண்ட் செலவிடப்படுகிறது. மேலும் இதனால் ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் மக்களை எளிமையாக தாக்குகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க வேண்டியுள்ளது. இதனை தடுக்கவே வாரத்தின் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.