Tamilசெய்திகள்

234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே அடித்தளம் அமைத்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை தொடங்கினார். இந்த யாத்திரை 12 மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அடைந்துள்ளது. வருகிற 30-ந்தேதி நடைபயணம் முடிவுக்கு வருகிறது.

இதே போல் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் வருடப்பிறப்பன்று திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் தொடங்க உள்ளார். 39 பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து 140 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளில் எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற பட்டியலை வைத்தும் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கையில் எடுத்தும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல உள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பதால் மாவட்ட வாரியாக விளையாட்டு குழுக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, சிலம்பாட்டம், கராத்தே, துப்பாக்கி சுடுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி முடித்த இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்களுக்கு புதிய உத்வேகம் அளிக்க உள்ளார்.

விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆங்காங்கே விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். மக்கள் பணியில் தி.மு.க. என்பதை பறைசாற்றும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள், அரசின் நிதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அவர் செய்து கொடுக்க உள்ளார்.

இதன் மூலம் அரசின் சாதனைகளை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் அவரது நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை நம்பர்-1 மாநிலமாக்க பாடுபட்டு வருவது போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. அரசின் திட்டங்கள் செயல்பாடுகளை பறைசாற்றும் வகையில் அவரது சுற்றுப்பயணத்தில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.