230 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு – தோல்வி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கருத்து

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி 23 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது.

தொடக்க வீரரான இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி புரூக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 55 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த ஐ.பி.எல். தொடரில் முதல் சதத்தை பதிவு செய்த பெருமையை அவர் பெற்றார். கேப்டன் மார்க்ராம் 26 பந்தில் 50 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

ஆந்த்ரே ரஸ்சல் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்தது. இதனால் 23 ரன் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. கேப்டன் நிதிஷ்ராணா 41 பந்தில் 75 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), ரிங்கு சிங் 31 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), தமிழகத்தை சேர்ந்த என். ஜெகதீசன் 21 பந்தில் 36 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மார்கோ ஜான்சென், மார்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர் டி. நடராஜன், உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட் டும் வீழ்த்தினார்கள்.

கொல்கத்தா அணி 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா கூறியதாவது:-

பந்து வீச்சின் போது நாங்கள் எங்களது திட்டங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும் 230 ரன் இலக்கை நோக்கி அடைவது என்பது மிகவும் கடினமானதே. நாங்கள் திட்டமிட்டு பந்து வீசி இருக்க வேண்டும். ரிங்கு சிங்கால் ஒரு போட்டியில் வெற்றி பெற்று கொடுக்க முடியும். ஒவ்வொரு போட்டியிலும் அதுமாதிரி நடக்காது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அவர் பேட்டிங் செய்த விதம் மற்றும் நான் பேட்டிங் செய்த விதம் மகிழ்ச்சியை அளித்தது. இந்த ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் மிக சிறப்பாகவே செயல்பட்டோம்.

ஐதராபாத் அணியை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் எங்கள் வெற்றியை எளிதாக்கி இருக்கும். ஆனால் நாங்கள் கூடுதலாக 30 ரன்கள் கொடுத்து விட்டோம். எங்களது முக்கியமான பந்து வீச்சாளர்கள் கூட அதிகமான ரன்கள் விட்டுக் கொடுத்துவிட்டனர். அதற்காக அவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் மற்ற வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தனர். இது ஒரு மோசமான நாள். தவறுகளை சரி செய்து கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொல்கத்தா அணி 5-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை நாளை சந்திக்கிறது. ஐதராபாத் அணி 2-வது வெற்றியை ருசித்தது. அந்த அணி அடுத்தப் போட்டியில் மும்பையை 18-ந் தேதி எதிர்கொள்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools