22ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ முடிவு!

மதுரை ஒத்தக்கடையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், சுரேஷ், செல்வராஜ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டதன் காரணமாக, எங்களின் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. போராட்டத்திற்கு தடை விதிக்கவும் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது. வருகிற 11-ந்தேதிக்குள் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால், இந்த மாதம் 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்குவோம்.

தொடக்கக்கல்வியை உயர்நிலைக்கல்வியுடன் இணைக்கும் முடிவை கைவிடவில்லை என்றால் கல்வித்துறை அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டுவோம். அதேபோல பள்ளிக் கல்வித்துறை செயலாளரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதை கைவிட வேண்டும்.

நாடுதழுவிய பொது வேலை நிறுத்தப்போராட்டத்திற்கும், ஜாக்டோ-ஜியோவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம். இல்லையென்றால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கோர்ட்டும், தமிழக அரசும் எங்களை ஏமாற்றி விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news