ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
வீரப்பம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்குகள் கேட்டு பேசினார். வீரப்பம்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள். மக்களை ஏமாற்ற பரோட்டா போடுவது, வடை சுடுவது என்று ஏமாற்றுகிறார்கள். பரோட்டா போடவும், டீ போடவுமா நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த கிழக்கு தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதை செய்யாமல் மக்களை ஏமாற்றுகிறீர்கள். இப்போதும் ஒரு அமைச்சராவது தாங்கள் செய்த ஒரு திட்டத்தை பற்றி கூற முடியுமா?.
இங்கு மக்களை ஆடு, மாடுகள் போன்று கொட்டகைக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். 120 இடங்களில் அப்படி அடைக்கப்பட்டு உள்ளனர். நான் பிரசாரத்துக்கு வந்திருப்பதால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கிடைத்து இருக்கிறது. 2 நேரம் பிரியாணியும் கொடுக்கிறார்கள். மக்களே அது உங்கள் பணம். நீங்கள் செலுத்திய வரிப்பணம் உங்களிடமே திரும்பி வருகிறது. அதை வாங்கிக்கொள்ளுங்கள். ஓட்டு மட்டும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு போடுங்கள்.
மக்களுக்கு பணம் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் வந்ததால் அதிகமாக கொடுக்கப்படுவதும் மகிழ்ச்சிதான். ஆனால் எப்படி நீங்கள் அடைத்து வைத்தாலும் மக்கள் அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை அ.தி.மு.க.வினரை காண வில்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். அப்படி என்றால் எதற்காக இத்தனை அமைச்சர்கள் இங்கேவர வேண்டும். அ.தி.மு.க.வை சந்திக்க பயம். அவர்களின் பயம் நம் வெற்றியை உறுதி செய்து விட்டது.
21 மாதத்தில் எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆனால், 7½ லட்சம் முதியோர்களின் உதவித்தொகையை ரத்து செய்து இருக்கிறது. வீட்டு வரியை உயர்த்தமாட்டோம் என்று தேர்தலுக்கு முன்பு அறிவித்து விட்டு 100 சதவீதம், வீடு, கடை வரிகளை உயர்த்தி இருக்கிறார்கள். ஆண்டுக்கு 6 சதவீதம் மின்சார கட்டணத்தை உயர்த்துகிறார்கள். இதுதான் திராவிட மாடல். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல். கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வழி நெடுகிலும் மக்களை சந்தித்து ஓட்டுகள் கேட்ட முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார்.