X

2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் செயல்படுகிறோம் – பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பங்கேற்றார். இதில் காசநோய் இல்லா பஞ்சாயத்து முன்னெடுப்பு பராமரிப்பு மாதிரி போன்ற முயற்சிகளை தொடங்கி வைத்தார்.

காசநோய்க்கான தேசிய தடுப்பு சிகிச்சை, இந்தியாவில் காசநோய் 2023 ஆண்டறிக்கை ஆகியவற்றை வெளியிட்டார். காசநோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருதுகள் வழங்கினார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த உச்சி மாநாடு காசியில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில காலத்திற்கு முன்பு இந்தியா ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற பார்வையை முன்னெடுத்து செல்ல முயற்சி எடுத்தது. தற்போது ஒரே உலக காச நோய் உச்சி மாநாடு மூலம் இந்தியா உலகளாவிய நன்மைக்கான மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மக்கள் பங்கேற்பின் மூலம் சிறப்பான பணியை செய்து உள்ளது. காசநோயை ஒழிப்பதற்காக உலகளாவிய இலக்கு 2030-ம் ஆண்டு ஆகும். ஆனால் இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டு வரும் இலக்கில் செயல்பட்டு வருகிறது. 80 சதவீத காச நோய் மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இது உலக நன்மைக்காக செயல்படும் நமது மருந்தின் திறமையை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.