அர்ஜென்டினா நாட்டில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. உலகின் 20 பெரிய பொருளாதாரமிக்க நாடுகள் குழுவாக ஒன்றிணைந்து ஜி20 நாடுகள் உருவாகியுள்ளன.
உலக மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் அளவிற்கு இந்த ஜி20 நாடுகளின் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக வர்த்தகத்தில் 80 சதவீதம், உலக மக்கள் தொகையில் 3ல் 2 பங்கு மற்றும் உலகின் நில பரப்பில் 50 சதவீதம் ஆகியவற்றை இவை கொண்டுள்ளன.
வருகிற 2022ம் ஆண்டில் இந்த சர்வதேச மாநாட்டை இத்தாலி நாடு நடத்த இருந்தது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு இந்த வாய்ப்பினை இத்தாலி வழங்கியுள்ளது. இதற்காக அந்நாட்டுக்கு நன்றி தெரிவித்த பின், இதுபற்றி இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், 2022ம் ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு வரும்படி ஜி20 நாட்டு தலைவர்களை அழைக்கிறேன்.
அந்த வருடத்தில் இந்தியா தனது 75வது வருட சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது. இந்த சிறப்பு நிறைந்த ஆண்டில் உலக தலைவர்களை வரவேற்கிறோம். மிக வேகமுடன் வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாட்டுக்கு வாருங்கள்.
இந்தியாவின் வளமிக்க வரலாறு மற்றும் பன்முக தன்மை ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள். இந்தியாவின் விருந்தோம்பலை பற்றி அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள் என டுவிட்டரில் அறிவித்துள்ளார்.