X

2021-2022 நிதி ஆண்டில் சென்னை ஐஐடிக்கு ரூ.1000 கோடி வருவாய்

சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சியில் சென்னை ஐ.ஐ.டி. நாட்டிலேயே முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. சென்னை ஐ.ஐ.டி. 2021-22-ம் நிதியாண்டில் மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து ரூ.768 கோடியும், தொழிலக ஆலோசனை வழியாக ரூ.313 கோடியும் பெற்றுள்ளது.

கம்ப்யூட்டிங், 5ஜி ஆகிய துறைகளின் வளர்ச்சி காரணமாக தொழில்துறை மற்றும் மத்திய, மாநில அரசுகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உருவாக்குவதில் சென்னை ஐ.ஐ.டி. முன்னிலை வகிக்கிறது. மொத்த நிதி வளர்ச்சியை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5-ல் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தொழில்துறை நிதி உதவி கடந்த சில ஆண்டுகளாக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. தொழில் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படும் திட்டங்களுக்கான நிதியை பெரு நிறுவனங்களுக்கான சமூக பங்களிப்பு நிதியில் இருந்து வழங்குவது தான் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.