கால்பந்து விளையாட்டில் உலக கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) ஆகும்.
24 அணிகள் இடையிலான 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 11-ந்தேதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, டென்மார்க், இத்தாலி உள்பட 12 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது. யூரோ கால்பந்து போட்டி 2-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கொரோனா வைரசின் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் யூரோ போட்டி திட்டமிட்ட காலத்தில் நடக்குமா? என்று சந்தேகம் கிளம்பியது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினில் தான் கொரோனாவின் ருத்ரதாண்டவம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அலெக்சாண்டர் செப்ரின் தலைமையில் சுவிட்சர்லாந்தில் நேற்று நடந்தது. இதில் 55 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கிளப், வீரர்களின் சங்க நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தங்களது ஆலோசனைகளை தெரிவித்தனர். இதன் முடிவில் யூரோ கால்பந்து போட்டியை அடுத்த ஆண்டுக்கு (2021) தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது 2021-ம் ஆண்டு இதே ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 11-ந்தேதி வரை நடத்துவது என்றும், போட்டி நடைபெறும் நகரங்களில் மாற்றமில்லை, அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி லண்டனில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, உலக சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, ரஷியா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி, பெல்ஜியம் உள்பட 20 அணிகள் தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 4 அணிகள் எவை என்பதை உறுதி செய்ய பிளே-ஆப் சுற்று இந்த மாதத்தில் நடக்க இருந்தது. அது ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு விட்டதால் பிளே-ஆப் சுற்று போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி அர்ஜென்டினா மற்றும் கொலம்பியாவில் நடக்க இருந்தது. கொரோனா பீதியால் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரும் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் யூரோ போட்டி நடக்கும் அதே காலக்கட்டத்தில் (ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 11-ந்தேதி வரை) இந்த போட்டியும் நடைபெறும் என்று தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.