Tamilசெய்திகள்

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் ஏற்பட்ட குழப்பம் – மக்கள் வருத்தம்

நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அனைத்தையும் திரும்பப்பெற இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி அறிவித்தது. இது, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள், 23-ந் தேதி (நேற்று) முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை அனைத்து வங்கிகளிலும் அந்த நோட்டுகளை கொடுத்து அவற்றிற்கு வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

அதோடு, ஒரு நேரத்தில் ஒருவர் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் என்ற அளவில்2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்ள முடியும், அதற்கு அடையாள ஆவணமோ, வேண்டுகோள் சீட்டோ தேவையில்லை. ஒருவர் ஒரு முறைக்கு ரூ.20 ஆயிரம் என்ற அளவில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை நேற்று தொடங்கியது. அடையாள ஆவணம் தேவையில்லை என்ற அறிவிப்பை முன்னிட்டு, பணத்தை மாற்றிக்கொள்வதற்காக வங்கிக்கு வந்த சிலர் ஆவணங்களை கொண்டு வரவில்லை. ஆனால் ஏற்கனவே உள்ள விதிகளின்படி, கே.ஒய்.சி. என்ற வாடிக்கையாளர் விவரங்களை வங்கிகள் கேட்டுப் பெறலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியிருந்ததால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வருவோர் 6 அடையாள ஆவணங்களில் ஒன்றை வங்கி காசாளரிடம் காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

வங்கிகள் குறிப்பிட்டுள்ள 6 விதமான அடையாள ஆவணங்கள், ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மக்கள் தொகை பதிவேடு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை ஆகும். ஆனால் கே.ஒய்.சி. பற்றிய விவரங்கள் தெரியாத மக்கள் சிலர், இதுபோன்ற அடையாள ஆவணங்களை வங்கிகளுக்கு நேற்று எடுத்து செல்லவில்லை.

பணத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் முயன்றபோது, அவர்களின் அடையாள விவரங்களை கோரும் விண்ணப்பத்தை வங்கி காசாளர் கொடுத்தார். அந்த அடையாள ஆவணங்களை கொண்டு வராதவரால் நேற்று ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அவர்களால் மாற்றிக்கொள்ள முடியாமல் போய்விட்டது. எனவே இதுகுறித்த அறிவிப்பை ஏன் நோட்டீஸ் பலகையில் வெளியிடவில்லை? என்று வங்கி அதிகாரிகள் மீது சிலர் கோபம் கொண்டதை பார்க்க முடிந்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்தது ஒன்று, ஆனால் வங்கிகளில் உள்ள நடைமுறை வேறு ஒன்றாக இருக்கிறது என்று அவர்கள் வருத்தத்துடன் சென்றனர். ஆனால் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் அடையாள விவரங்கள் ஏற்கனவே வங்கியிடம் இருக்கும் என்பதால் அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் கோரப்படவில்லை.