பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக சையத் அகமது பரீத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தார்கள். மேலும் அவர் மீது அமலாக்கத்துறையிலும் வழக்குப்பதிவாகி இருந்தது.
அந்த வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் பரீத்திடம் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக கடந்த 10-ந் தேதி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஜனார்த்தனரெட்டி ஆஜரானார். பின்னர் மறுநாள் (11-ந் தேதி) நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறி ஜனார்த்தனரெட்டியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். பின்னர் அவர், நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஜனார்த்தனரெட்டி சார்பில், பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலையில் ஜனார்த்தனரெட்டியின் ஜாமீன் மனு நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜனார்த்தனரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜெகதீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரூ.2 லட்சம் பிணைத்தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.