இந்தியாவில் 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
அடுத்த வருடம் இந்தியாவிற்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த 5 மாநில தேர்தல்களை அதற்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. இதன் காரணமாக 5 மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய தேசிய கட்சிகளும், அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ள பிராந்திய கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன. இந்த 5 மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜல்பந்தா பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
மதத்தின் பெயரால் உங்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களுக்கு (பா.ஜ.க.) வாக்களிப்பீர்களா அல்லது உங்கள் நல்வாழ்வுக்காக பாடுபடும் கட்சிக்கு (காங்கிரஸ்) வாக்களிப்பீர்களா? மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள சுமார் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் சுவாமி ஆத்மானந்த் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
பொதுமக்களுக்கு 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். சமையல் எரிவாயு தொகையில் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சாலை விபத்தில் சிக்கும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.
இவ்வாறு பிரியங்கா கூறினார்.
முன்னதாக சத்தீஸ்கரில் பிரியங்கா காந்தியின் சகோதரரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தியும் தனது பிரச்சாரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.