20 ஓவர் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசை – 3வது இடத்திற்கு முன்னேறிய குல்தீப் யாதவ்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி தொடர் முடிவின் அடிப்படையில் வீரர்கள் தரவரிசைபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), காலின் முன்ரோ (நியூசிலாந்து), முதல் 2 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா) ஒரு இடம் சரிவு கண்டு 3-வது இடத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்நாயகன் விருது பெற்ற இந்திய வீரர் ஷிகர் தவான் 5 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தையும், ரோகித் சர்மா 2 இடம் சரிந்து 6-வது இடத்தையும், லோகேஷ் ராகுல் 2 இடம் பின்தங்கி 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட்கோலி 14-வது இடத்தை பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் முறையே முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 17 இடம் முன்னேறி 5-வது இடத்தை பெற்றுள்ளார். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் முதலிடத்தை பெற்றுள்ளார்.